SIP Vs STP - வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளுங்கள்

SIP மற்றும் STP - வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வோம்

குறிப்பிட்ட கால இடைவேளையில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதில், சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பஃர் பிளான்கள் (STPகள்) அல்லது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIPகள்) என இரண்டுமே ஒரே மாதிரியானவை. ஆனாலும் அவை செயல்படும் விதத்தில் வேறுபடுகின்றன. SIP, STP என இரண்டைப் பற்றியும் தனித்தனியாகவும், அவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

1. SIP: SIPகள் என்பவை மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்யும் ஒரு வகை முதலீடாகும். இதில் முதலீட்டாளர் ஏதேனும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ச்சியான இடைவேளையில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வார். உதாரணமாக தினசரி, வாரந்தோறும், மாதந்தோறும், காலாண்டு தோறும் என எப்படியும் இருக்கலாம். இது மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒழுக்கமாகவும் முறையாகவும் தொடர்ந்து முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டது.

2. STP: STP-இல் ஒரே ஃபண்ட் ஹவுஸில் இருக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் இருந்து மற்றொன்றுக்கு முதலீட்டாளரால் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். STP-இல் முதலீடு செய்யும்போது, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் இருந்து மற்றொன்றுக்கு எவ்வளவு தொகை, எவ்வளவு கால இடைவேளையில் மாற்றப்பட வேண்டும் என்பதை நீங்கள் முன்கூட்டியே நிர்ணயம் செய்து வைப்பீர்கள். முதலீடு செய்வதற்கு அதிகத் தொகையை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் திடீர் ஏற்ற இறக்கங்களைக் குறைப்பதற்காக படிப்படியாக முதலீடு செய்வதற்கு, பரவலாக இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். 

இந்த இரண்டு வகைப் பண்புகளுமே தனிப்பட்ட முறையில் வெவ்வேறானவை, எளிய உதாரணங்களைக் கொண்டு SIP, STP ஆகிய இரண்டும் எப்படி வேலை செய்கின்றன என்று புரிந்துகொள்ளலாம். 

SIP எ.கா:

SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு முதலீட்டாளர், சரியான மியூச்சுவல் ஃபண்டை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். முதலீடு செய்ய வேண்டிய கால இடைவேளையைத் தேர்வுசெய்ய வேண்டும் (எ.கா. மாதந்தோறும்), முதலீடு செய்ய விரும்பும் தொகையைத் தேர்வுசெய்ய வேண்டும் (எ.கா. ரூ.10,000), ஸ்கீமையும், தேர்வுசெய்த ஃபண்டிற்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்த வேண்டிய ஆட்டோமேட்டிக் டெபிட் வசதியையும் அமைக்க வேண்டும். இதன் மூலம் அவர் தேர்வுசெய்த மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் SIP முறையில் ரூ.10,000 முதலீடு செய்யப்படும்.

STP எ.கா: 

ஒரு முதலீட்டாளரிடம் ரூ. 20 இலட்சம் பணம் உள்ளது, ஆனால் மார்க்கெட் ஏற்ற இறக்கமாக இருப்பதால் ஈக்விட்டி ஃபண்ட்களில் மொத்தமாக அவர் முதலீடு செய்ய விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆகவே மார்க்கெட்டுடன் ஒப்பிடும்போது ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கின்ற, குறுகிய கால டெப்ட் ஃபண்ட்களில் இருபது இலட்சம் முழுவதையும் அவர் முதலீடு செய்கிறார். பிறகு ஒரு ஃபண்டிற்கு அவர் STP முதலீட்டை அமைக்கலாம். அதன்பிறகு தேர்வுசெய்த ஈக்விட்டி ஃபண்ட்களில் குறிப்பிட்ட கால இடைவேளையில் தொடர்ச்சியாக அவரது டெப்ட் ஃபண்ட்களில் இருந்து ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு பணம் செலுத்தப்படும். 

ஒரே ஃபண்ட் ஹவுஸில் இருக்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களுக்கு இடையே மட்டுமே STP வசதியை அமைக்க முடியும். ஒரு ஃபண்ட் ஹவுஸில் உள்ள இரண்டு அல்லது மேற்பட்ட ஸ்கீம்களுக்கு இடையே STP முதலீட்டை அமைக்க முதலீட்டாளர் தேர்வுசெய்யலாம். மொத்தத் தொகையை முதலீடு செய்கின்ற டெப்ட் ஃபண்டின் வெளியேற்றக் கட்டணத்தை முதலீட்டாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
பொறுப்புதுறப்பு

 பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
 

282

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?