இந்தியப் பங்கு சந்தை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், நீங்கள் SEBI-ஐ ( செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா) அணுகலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட இடைத்தரகு நிறுவனங்கள், மார்க்கெட் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சிக்கல்களையும் குறைகளையும் SEBI கையாள்கிறது. SEBI சட்டம் 1992; செக்யூரிட்டிஸ் காண்ட்ராக்ட் ரெகுலேஷன் சட்டம், 1956; டெபாசிட்டரிஸ் சட்டம், 1996 மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்பான புகார்களை SEBI விசாரிக்கும்.
SEBI இடம் எப்படி புகார் தெரிவிப்பது?
SCORES என்பது, SEBI-இன் இணையதள அடிப்படையிலான புகார் தீர்ப்பு அமைப்பாகும். பட்டியலிடப்பட்ட நிறுவனம், இடைத்தரவு நிறுவனம் அல்லது மார்க்கெட் உள்கட்டமைப்பு நிறுவனத்திற்கு எதிரான உங்கள் புகாரை இந்தத் தளத்தின் வழியாக SEBI இடம் நீங்கள் சமர்ப்பிக்கலாம். எந்த வகையான புகார்களை SEBI ஏற்பதில்லை என்பதைப் பற்றியும் SEBI-இன் FAQ பிரிவில் குறிப்பிட்டுள்ளது.
ஒரு புகாரைப் பதிவு செய்யும்போது, அந்தப் பிரச்சனை பற்றி நீங்கள் ஏற்கனவே நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளீர்களா என்று SEBI சரிபார்க்கும். நீங்கள் “இல்லை” என்று பதிலளித்தால், உங்கள் புகார் முதலில் அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும், அந்த நிறுவனம் உங்கள் புகாருக்கு 21 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். நீங்கள் “ஆம்” என்று பதிலளித்தால் உங்கள் புகார் நேரடியாக SEBI-க்குச் செல்லும்.
SCORES-இல் புகாரைப் பதிவு செய்வதற்கு பொதுவாக இந்த ஆவணங்கள் தேவைப்படும்:
> ஒப்பந்தங்களின் நகல்கள்
> விண்ணப்பப் படிவங்கள்
> பேங்க் ஸ்டேட்மெண்ட்கள்
> ஒப்பந்தக் குறிப்புகள்
> மின்னஞ்சல்கள், ஃபேக்ஸ் நகல்கள் மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களின் நகல்கள்
SEBI SCORES போர்ட்டலில் எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பது பற்றிய ஒரு எளிய வழிகாட்டியை இப்போது பார்க்கலாம்:
படி 1: SEBI இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது நேரடியாக SCORES தளத்திற்குச் செல்லவும். இதற்கு நீங்கள் புதியவராக இருந்தால், உங்கள் பிறந்த தேதி மற்றும் PAN எண்ணைக் கொண்டு பதிவு செய்யவும். உங்கள் விவரங்கள் தானாகவே பெற்றுக் கொள்ளப்படும்.
படி 2: பதிவு செய்த பிறகு உங்கள் பயனர் பெயர் கொண்டு உள்நுழையவும்.
படி 3: உள் நுழைந்த பிறகு, “புகார் பதிவு செய்யவும்” என்ற பிரிவில், பட்டியலிடப்பட்ட நிறுவனம், ஸ்டாக் ப்ரோக்கர், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில், யாருக்கு எதிராக நீங்கள் புகார் அளிக்க விரும்புகிறீர்களோ அதைத் தேர்வு செய்யவும்.
படி 4: சரியான வகையைத் தேர்வு செய்து, தேவையான தகவலை துல்லியமாக நிரப்பவும். பரிவர்த்தனைப் பதிவுகள் அல்லது தகவல் பரிமாற்றங்களின் நகல்கள் போன்ற சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்கவும்.
படி 5: புகார் துல்லியமாக உள்ளதா என்று ஒருமுறை சரிபார்க்கவும்.
படி 6: உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கவும், சமர்ப்பித்த பிறகு வழங்கப்படும் தனித்துவமான புகார் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளவும். உங்கள் புகாரின் நிலை பற்றித் தெரிந்து கொள்ள அது தேவைப்படும்.
படி 7: போர்ட்டலில் உங்கள் புகாரின் நிலை பற்றி நிகழ் நேரத்தில் கண்காணியுங்கள். உங்கள் புகார் தொடர்பான செயல் முறையின் பல்வேறு நிலைகளைப் பற்றி SEBI அவ்வப்போது தகவலைப் புதுப்பிக்கும்.
படி 8: SEBI உங்களிடம் மேலும் தகவல் கேட்டால், விசாரணைக்கு உதவியாக உடனடியாக பதில் அளிக்கவும்.
படி 9: SEBI தனது விசாரணையை முடித்த பிறகு, உங்களுக்கான தீர்வை பற்றியும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இந்தப் படிகளைப் பின்பற்றி முதலீட்டாளர்கள் தங்கள் புகார்களைப் பதிவு செய்ய SEBI SCORES போர்ட்டலைப் பயன்படுத்தலாம், இந்தியாவின் நிதி சந்தைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை பராமரிக்க உதவலாம்.
SEBI ODR (ஆன்லைன் டிஸ்பியூட் ரிசல்யூஷன்) என்பது புகார்களை விசாரிப்பதற்கான மற்றொரு சேவையாகும். இது செக்யூரிட்டிகளின் பரிவர்த்தனைகள் தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கான SEBI வழங்கும் ஆன்லைன் வசதியாகும்.
இந்த சேவையை முதலீட்டாளர்கள் SEBI தளத்திலேயே அணுகலாம். செக்யூரிட்டிகள் சந்தை பரிவர்த்தனைகள் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்வதற்கு இந்த சேவையில் பயனர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த சேவையில் பயனர்கள் வெளிப்படையாகவும் சிறந்த முறையில் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்ய முடியும், கண்காணிக்கவும் தீர்வுகளைப் பெறவும் முடியும்.
SEBI ODR சேவையில் ஒரு புகாரில் சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களுக்கு இடையே நேரடியாக தகவல் பரிமாறிக் கொள்ளவும் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி கலந்துரையாடவும் முடியும். SCORES சேவையைப் போலவே, SEBI ODR சேவையிலும், பயனர்கள் தங்களுடைய புகார்களின் நிலையைக் கண்காணிக்கவும், அவ்வப்போது அறிவிப்புகளைப் பெறவும் முடியும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.