ரிஸ்க் அல்லது நஷ்டமே இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்டில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம், ஆனால் அப்படி ஒன்று இல்லை என்பது தான் கசப்பான உண்மை! மியூச்சுவல் ஃபண்ட்கள் எல்லாமே ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று என்று ஏதேனும் ஒரு ரிஸ்க் இருப்பவை தான். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் மார்கெட் ரிஸ்க் உடையவை, டெப்ட் ஃபண்ட்கள் வட்டி விகித ரிஸ்க்கும் பணம் தர இயலாத நிலை உருவாகும் ரிஸ்கும் கொண்டவை. டெப்ட் ஃபண்ட்கள் எல்லாவற்றிலும், போர்ட்ஃபோலியோவின் சராசரி முதிர்வைப் பொறுத்து ரிஸ்க் அளவு வேறுபடும். டெப்ட் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவின் முதிர்வு அதிகமாக அதிகமாக, வட்டி விகித ரிஸ்கும் பணம் தர இயலாத நிலை உருவாகும் ரிஸ்கும் அதிகரிக்கும்.
ஓவர்நைட் ஃபண்ட்கள் அடுத்த நாளே முதிர்வடையும் டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும் டெப்ட் ஃபண்ட்கள் ஆகும். எனவே, மற்ற எல்லா வகை டெப்ட் ஃபண்ட்களையும் விட, இவையே குறைந்தபட்ச முதிர்வுக் காலம் கொண்டவை. இதனால், இவற்றில் வட்டி விகித ரிஸ்கும் பணம் தர இயலாத நிலை உருவாகும் ரிஸ்கும் மிகக் குறைவு. அதற்காக ஓவர்நைட் ஃபண்ட்களில் ரிஸ்கே இல்லை என்று கருத முடியாது, மற்ற எல்லா வகை டெப்ட் ஃபண்ட்களையும் ஒப்பிடுகையில் இதன் ரிஸ்க் மிகக் குறைவு என்றே எடுத்துக்கொள்ள வேண்டும், அதுவே நல்லது. ஆகவே, அதிக ரிட்டர்ன்ஸ் வராவிட்டாலும், மூலதனம் பாதுகாப்பாகத் திரும்ப வர வேண்டும் என்று கருதும்போது, மிகக் குறைந்த ரிஸ்க்குடன், மிகக் குறைந்த நாட்களுக்கு பெரிய தொகைகளை முதலீடு செய்து வைக்க இவை மிகச் சிறந்தவை என்று கருதப்படுகிறது.
ஓவர்நைட் ஃபண்ட்கள் அதிகப்படியான ரொக்கம் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, ரொக்கம் வைத்திருக்கும் சிறிய முதலீட்டாளர்களும் வெகு சில நாட்களுக்கு முதலீடு செய்து வைக்கவும் மிக ஏற்றவை.