ஓப்பன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட்கள், முதலீட்டாளர்கள் தங்கள் யூனிட்களை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எந்த செலவும் இல்லாமல் பணமாக்க அனுமதிக்கின்றன. இந்த நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்கு முன்பே ஒரு முதலீட்டாளர் தனது யூனிட்களைப் பணமாக்க விரும்பினால், வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படுகிறது. ஃபண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்பே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை விற்றால், மியூச்சுவல் ஃபண்ட்களில் வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படும். நீண்டகால ஹோல்டிங் காலகட்டம் தேவைப்படும் ஃபண்ட்களில் குறுகியகால இலக்குகளைக் கொண்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். பொதுவாக லிக்விட் ஃபண்ட்களுக்கு வெளியேற்றக் கட்டணம் கிடையாது.
திட்டத் தகவல் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்பு யூனிட்களைப் பணமாக்கினால், NAVயின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வெளியேற்றக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதாவது, திட்டத்திலுள்ள ஒரு முதலீட்டில் இருந்து ஒரு வருடத்திற்குள் பணம் எடுத்தால், அதற்கு 1% வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படும் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் NAV 100 ரூபாயாக இருந்து, ஒரு வருடத்திற்கு முன்பே உங்கள் முதலீட்டை நீங்கள் பணமாக்கினால், உங்கள் ஹோல்டிங்கின் ஒரு யூனிட்டுக்கு நீங்கள் 99 ரூபாய் மட்டுமே பெறுவீர்கள், ஏனெனில் முன்கூட்டியே பணம் எடுப்பதற்காக ஃபண்ட் ஹவுஸின் மூலம் 1% தொகை பிடித்தம் செய்யப்படும்.
நீங்கள் செய்த முதலீடுகளைப் பொறுத்தும், நீங்கள் எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் குறுகியகால அல்லது நீண்டகால மூலதன இலாபங்கள் வரியும் உங்களுக்கு விதிக்கப்படும். ஈக்விட்டி சார்ந்த நிதிப் பரிவர்த்தனைகளும் STT-க்கு (பத்திரப் பரிவர்த்தனை வரி) உட்பட்டவை. இந்த நிதிகளிலிருந்து யூனிட்களை வாங்கும்போது அல்லது விற்கும்போது, ஒவ்வொரு முறையும் உங்கள் பரிவர்த்தனைக்கான செலவுடன் STT-ஐயும் செலுத்துவீர்கள்.