மியூச்சுவல் ஃபண்டுகளில் ஏன் நாமினேஷன் அவசியம் மற்றும் அதற்கான செயல்முறை என்ன?

Video

வாழ்வில் உங்களுக்கென்று இலக்குகளும் கனவுகளும் இருக்கும். அந்தக் கனவுகளையும் இலட்சியங்களையும் அடைவதற்காக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறீர்கள். நீங்கள் வாழும்போதும், உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் நீங்கள் நேசிக்கும் நபர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கு உதவவும் நீங்கள் முதலீடு செய்யலாம்.

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் அடைய வேண்டிய குறிப்பிட்ட சில இலக்குகள் உள்ளன, நிறைவேற்ற வேண்டிய சில கனவுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு இலக்கையும் அடைய, அதற்காகத் திட்டமிடுவதும், அதை மறக்காமல் இருப்பதும் அதை நிறைவேற்றத் தேவையான பணமும் அவசியம்.

வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது! ஒருவர் செய்யும் முதலீடுகள், அவர் இறந்த பிறகு தானாகவே அவரது துணை அல்லது வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புவார். ஆனால் யதார்த்தத்தில், இந்தச் செயல்முறை அவ்வளவு எளிதாகவோ சுமூகமாகவோ இல்லாமல் போகலாம். ஏன் அப்படி என்று புரியவில்லையா? சரி, அதைப் புரிந்துகொள்ள ராஜீவ் குப்தாவின் கதையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

ராஜீவ் குப்தா தனது இலக்குகளுக்கு ஒன்று, தன் மனைவியின் நிதிப் பாதுகாப்புக்கு ஒன்று, தன் பிள்ளைகளின் படிப்புக்கு இரண்டு என்று மொத்தமாக நான்கு வெவ்வேறு போர்ட்ஃபோலியோக்களை உருவாக்கி வைத்திருந்தார். அவருடைய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகளும் அதற்கு ஏற்றபடி திட்டமிடப்பட்டன.

ராஜீவ் குப்தா தன்னுடைய ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிற்கும் நாமினி நியமித்திருந்தார். நல்ல வேளை, இதில் அவர் புத்திசாலித்தனமாக இருந்திருக்கிறார்! தனக்கு ஏதேனும் நடந்தால் அவரது போர்ட்ஃபோலியோக்கள் உரிமையுள்ள நாமினியின் பெயருக்கு மாறிவிடுவதையும், அவருடைய இலக்குகள் நிறைவேறுவதையும், நாமினேஷன் என்னும் ஒரு எளிய விஷயத்தை செய்வதன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டார்.

MF நாமினேஷன்கள்

நாமினேஷன் என்பது ஒருவர் தனது மரணத்திற்குப் பிறகு, அவருடைய மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோ, டிமேட் கணக்கு அல்லது வங்கிக் கணக்கில் உள்ள பணம், குறைந்தபட்ச ஆவண வேலைகள் மூலம், சிறப்பான விதத்தில் அவருடைய அன்பிற்குரிய நபர்களுக்குக் கிடைப்பதை சாத்தியமாக்குகின்ற ஒரு எளிய, செலவு குறைந்த வழியாகும்.

யூனிட்டுகளைப் பொறுத்தவரை, நாமினேஷன் செய்வதன் மூலம், யூனிட் ஹோல்டரின் இறப்புக்குப் பிறகு சொத்தில் பங்கை உருவாக்காது. யூனிட் ஹோல்டர்கள் அனைவரும் இறந்தால், அப்போது மட்டுமே யூனிட்டுகளின் உரிமைகள் நாமினி(களுக்கு) மாறும். நாமினேஷன் செய்யப்பட்டதனால் மட்டுமே ஒரு நாமினிக்கு, சொத்தில் உரிமையோ பங்கோ கிடைத்துவிட வேண்டும் என்கிற அவசியமில்லை. நாமினிகள், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது எழுதிக்கொடுக்கப்பட்டவர்களுக்கான ஏஜென்ட்டாகவும் ட்ரஸ்ட்டீயாகவும் மட்டுமே யூனிட்டுகளைப் பெறுவார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நாமினேஷன் கட்டாயமா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு நாமினேஷன் என்பது கட்டாயமாகும். 1 அக்டோபர் 2022 முதல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைத் தொடங்கும் முதலீட்டாளர்கள், நாமினியாக ஒருவரைக் கட்டாயம் நியமிக்க வேண்டும் அல்லது நாமினேஷன் வேண்டாம் என்று அறிவிக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஏற்கனவே முதலீட்டாளர்களாக உள்ளவர்களும் 31 மார்ச் 2023-க்குள் தங்கள் பழைய முதலீடுகளுக்கு நாமினி நியமிக்க வேண்டும் அல்லது நாமினேஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்க வேண்டும். முதலீடு தனிநபருடையதா அல்லது கூட்டாக ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கொண்டுள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் இது அனைத்து முதலீடுகளுக்கும் பொருந்தும். 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு நாமினிகளை எப்படி சேர்ப்பது?

அருகிலுள்ள AMC/RTA கிளையில் நேரடிக் கோரிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங்குகளில் நாமினிகளைச் சேர்க்கலாம் அல்லது மாற்றலாம். மாறாக AMC/RTA இணையதளம் அல்லது mfcentral.com தளத்திலும் நீங்கள் இதைச் செய்யலாம். உங்கள் கணக்கில் உள்நுழைந்து, நாமினிகளைச் சேர்க்க வேண்டிய/மாற்ற வேண்டிய ஃபோலியோவைத் தேர்ந்தெடுக்கவும். பெயர், முகவரி போன்ற விவரங்களையும், ஒவ்வொரு நாமினியும் எவ்வளவு சதவீதம் பெற வேண்டும் என்ற விவரங்களையும் நிரப்பவும். சதவீதம் குறிப்பிடப்படாவிட்டால், ஒவ்வொரு நாமினியும் சமமான சதவீதத்தைப் பெறுவார்கள். பிறகு இருபடிச் சரிபார்ப்பு அங்கீகரிப்பின் ஒரு பகுதியாக, நாமினி மாற்றக் கோரிக்கையை சரிபார்ப்பதற்காக உங்களுக்கு ஒரு OTP வரும். மாறாக, இ-சைன் வசதியைப் பயன்படுத்தி டிஜிட்டல் படிவத்திலும் நீங்கள் கையொப்பம் இடலாம்.

ஆன்லைனில் செய்வது உங்களுக்கு சௌகரியமாக இல்லை என்றால், ஃபண்ட் ஹவுஸின் அருகிலுள்ள கிளை அல்லது முதலீட்டாளர் சேவை மையத்திற்குச் சென்று உங்கள் ஃபோலியோவின் நாமினி விவரங்களை சேர்க்கலாம்/மாற்றலாம். அங்கு சென்று ஒரு எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பொது விண்ணப்பப் படிவத்தில் அதற்குரிய பகுதியை மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும், அவ்வளவுதான்! நாமினிகளைச் சேர்க்க வேண்டிய/மாற்ற வேண்டிய கணக்கு/ஃபோலியோவை நீங்கள் குறிப்பிட வேண்டும், அதோடு நாமினிகளின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். கணக்கு/ஃபோலியோவில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகள் இருந்தால், உங்கள் முதலீடுகளில் எத்தனை சதவீதம் எந்த நாமினிக்கு என்ற சதவீதப் பகிர்வையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஜாயின்ட் ஹோல்டிங்காக இருந்தால், எல்லா யூனிட் ஹோல்டர்களும் படிவத்தில்  கையொப்பம் இட வேண்டும்.

இறுதிக் கருத்து

ஒரு முதலீட்டாளர் தனது கணக்கில் நாமினியைக் குறிப்பிடாமல் விட்டால் அல்லது நாமினேஷன் வேண்டாம் எனத் தேர்வு செய்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசு(கள்) மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுக்கான சான்றை வழங்கிய பிறகு அந்த முதலீடுகளை உரிமை கோர முடியும். ஆனால், இது மிக நீண்ட செயல்முறையாகும். ஆகவே, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அனைத்திலும் நாமினியை(களை) சேர்ப்பது நல்லது. இது ஏதேனும் எதிர்பாராத நிகழ்வு நேரும்போது சொத்துகள் சிரமமின்றி உரியவர்களுக்குக் கிடைக்க உதவும்.

ஆகவே, உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்குகள் அனைத்திலும் நாமினி விவரங்களைச் சேருங்கள், ஏதேனும் எதிர்பாராத நிகழ்வு நேரும்போது உங்கள் முதலீடுகளை உரிமைகோர, உங்கள் குடும்பத்தினர் சட்டப்பூர்வ வாரிசுக்கான சான்றை வழங்கும் சிரமத்தை அடையாமல் காத்திடுங்கள்.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?