ஸ்கீமின் போர்ட்ஃபோலியோ சார்ந்த முற்றிலும் முதலீடு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஈட்டும் இலாபத்திலிருந்தே டிவிடென்ட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வழங்குவது டிரஸ்டீயின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும். மார்க்கெட் வீழ்ச்சியின் காரணமாக ஒரு ஸ்கீம் நட்டத்தைச் சந்தித்தால், டிவிடென்ட் பே-அவுட் அறிவிப்பைக் கைவிடலாம் என்று டிரஸ்டீக்கள் முடிவு செய்யலாம். டிவிடென்ட் என்பது லாபம் அல்லது வருமானம் என்பதால், அது வரிவிதிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது. டிவிடென்ட்களுக்கு விதிக்கப்படும் வரி டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி (DDT) எனப்படுகிறது. முன்பெல்லாம், டிவிடென்ட்கள் வழங்கப்படும்போதே வரி பிடிக்கப்பட்டது. அதாவது அதை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முன்பே அந்த ஸ்கீமே வரித் தொகையைக் கழித்துக்கொள்ள வேண்டும். இதனால் டிவிடென்ட் பே-அவுட் தொகை குறைந்தது. ஆனால் முதலீட்டாளர்களின் கைக்குக் கிடைக்கையில் அது வரி செலுத்தத் தேவையில்லாத தொகையாகக் கிடைத்தது.
ஏப்ரல் 01, 2020 முதல், DDT கைவிடப்பட்டு, மியூச்சுவல் ஃபண்ட் டிவிடென்ட் தொகைகள் முதலீட்டாளர்களின் தரப்பில் வரிவிதிக்கப்படும் வருமானமாகக் கருதப்பட்டது. இப்போது டிவிடென்ட் வருமானங்கள், முதலீட்டாளர்களின் பிற ஆதாரங்களில் இருந்து பெறும் வருமானமாகக் கருதப்படும். முதலீட்டாளர்கள் தமது வரி வரம்புக்கு ஏற்ப அவற்றுக்கு வரி செலுத்த வேண்டும். ஆகவே, முன்பு இருந்த DDT வரி முறையோடு ஒப்பிடுகையில், மியூச்சுவல் ஃபண்ட் டிவிடென்ட் வரி மூலமான லாபம் அல்லது நஷ்டம் என்பது, முதலீட்டாளரின் வரி வரம்பைப் பொறுத்து அமையும்.
முன்னர், ஸ்கீமானது ஒரே சீரான டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி விகிதத்தின்படி வரி பிடித்துக்கொண்ட பிறகு, எல்லா முதலீட்டாளர்களுக்கும் டிவிடென்ட் பே-அவுட் கிடைத்தது. ஸ்கீமின் வகையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகின்ற சீரான வரி விதிப்பு விகிதத்தைப் பயன்படுத்துவதன் மூலம், DDT ஆனது ஸ்கீமின் பகிர்ந்தளிக்கக்கூடிய உபரியின் அளவைக் குறைத்ததால், DDT-இன் தாக்கம் எல்லா முதலீட்டாளர்களுக்கும் சம அளவில் இருந்தது. ஆனால் இப்போது அந்த முறை இல்லை. முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் விகிதத்திற்கு ஏற்ப டிவிடென்ட்களைப் பெறுவார்கள், குறைந்த வரி வரம்பில் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில், அதிக வரி வரம்பில் இருக்கும் முதலீட்டாளர்கள் தாம் பெறும் டிவிடென்ட்களுக்கு அதிக வரி செலுத்துவார்கள்.
DDT-ஐ அகற்றியது, ஒரு ஸ்கீமில் உள்ள குரோத் மற்றும் டிவிடென்ட் முறைகளைத் தேர்வுசெய்துள்ள இரு வகை முதலீட்டாளர்களுக்குமே வெற்றிக்கான சம வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இப்போது முதலீட்டாளர்கள் தமக்குப் பொருந்தக்கூடிய வரி விகிதம் (செஸ், சர்சார்ஜ் உட்பட), டிவிடென்ட் வருமானத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டிவிடென்ட் முறையைத் தேர்வுசெய்வதில் உள்ள நன்மைகளை சீர்தூக்கிப் பார்த்தே முடிவுசெய்ய வேண்டும்.