நீண்டகால நோக்கில் பிற முதலீடுகளை விடச் சிறந்த ரிட்டர்னைப் பெறுகின்ற எண்ணத்துடன் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்குப் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற ஒரு குழப்பம் பெரும்பாலும் அனைவருக்குமே இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட்கள் ரிஸ்க் கொண்டவை என்பதால், கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தை அதில் முதலீடு செய்வதற்குப் பலரும் தயங்குகின்றனர். ரிஸ்க் இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து பலனடையும் வகையிலான ஃபண்ட் எது என்று அவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கையில் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. அதுபோன்றுதான், பிற மியூச்சுவல் ஃபண்ட்ஸிலும் ரிஸ்க்கே இல்லாத ஃபண்ட்கள் என்று எதுவுமில்லை. ஆனால், ஓவர்நைட் ஃபண்ட்கள் சற்று ஏறக்குறைய மிகக் குறைந்த ரிஸ்க்கை கொண்டுள்ளன.
இந்த ஃபண்ட்கள் அடுத்த ஒரு நாளில் முதிர்வடைகின்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்திடும். எனவே, எளிதில் பணமாக்க முடியும் மற்றும் ரிஸ்க்கும் குறைவு. ஆனால், நீண்டகால நோக்கில் நீங்கள் எதிர்பார்க்கின்ற ரிட்டர்னை இந்த ஃபண்ட்களில் இருந்து பெற முடியாது. ஒருவேளை நீங்கள் உங்கள் முழு முதலீடுகளைச் செய்வதற்கு முன்பு சிறு அளவிலான தொகையுடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைச் சோதித்துப் பார்க்க விரும்புகின்ற பட்சத்தில், ஓவர்நைட் ஃபண்ட்கள் ஏற்றவை. ஆனால், குறுகிய காலகட்டத்திற்கு பெரும் தொகையை நீங்கள் முதலீடு செய்ய விரும்புகின்ற பட்சத்திலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டைப் பரிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகின்ற பட்சத்திலோ மட்டுமே இந்த ஃபண்ட்களைப் பயன்படுத்திடுங்கள். இவை மேட்ச்சுக்காக கிரிக்கெட் வீரர்கள் நெட் பயிற்சி செய்வதைப் போன்றவை.