என்னிடம் போதிய சேமிப்பு இருந்தால் நான் ஏன் ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிட வேண்டும்?

நான் போதுமான அளவு சேமித்துவிட்டேன், அப்போதும் ஏன் நான் பணி ஓய்வுக் காலத்திற்காகத் திட்டமிட வேண்டும்?

இப்போது உங்கள் வயது எத்தனை என்றாலும், உங்கள் நிதி நிலை எப்படி இருந்தாலும், நாளை எது எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. நாளையைப் பற்றி உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாதபோது, பணி ஓய்வுக்காக நீங்கள் சேமித்திருக்கும் பணம் உங்கள் கடைசி நாள் வரை உங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்பது மட்டும் எப்படி நிச்சயம்?!

சராசரி ஆயுட்காலமும் மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, பணி ஓய்வுக் காலம் என்பது பத்து ஆண்டுகளா முப்பது ஆண்டுகளா என்பதும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. நிதித் திட்டமிடல் எதுவும் சரியாகப் பலனளிக்க வேண்டுமானால், எவ்வளவு காலம் சேமிக்க வேண்டும், எப்போது உங்களுக்கு அதன் பலன் வேண்டும் என்ற கால வரையறை தெளிவாகத் தெரிய வேண்டும், ஆனால் பணி ஓய்வுக் காலத்தைப் பொறுத்தவரை, இந்த விஷயங்களைப் பற்றி முன்பே உறுதியாகக் கூற முடியாது. ஆகவே, பணி ஓய்வுக்காக அதிக நிதி முதலீடு செய்வதே சிறந்தது. நிதி இலக்குகளை அடைவதே கடினமாக இருக்கையில், இப்படி அதிக அளவு எப்படி சேமிப்பது என்ற கேள்வி எழலாம்! நீண்ட கால முதலீட்டில், பண வீக்கத்தையும் மீறிப் பலனளிக்கக் கூடிய, உங்கள் செல்வத்தைப் பெருக்கக் கூடிய ஒரு சேமிப்புத் திட்டத்தில் சேமிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் பணி ஓய்வுக் காலத்திற்குத் தேவையான இந்த நிதியைச் சேமிக்கலாம். அதற்கொரு சிறந்த வழிதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.

பணி ஓய்வுக் காலத்திற்காக சேமிக்கும் அதிக அளவிலான நிதியானது, எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகள் அல்லது ஏதேனும் விரும்பத் தகாத சம்பவங்கள் போன்ற சவாலான சூழல்களில் உங்களைப் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி, எப்போதாவது உங்கள் பிள்ளைகளுக்கோ பேரப் பிள்ளைகளுக்கோ அன்பளிப்பாகக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தவும், உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து உறவுகளை இனிதாக்க அவ்வப்போது பயணம் செய்வதற்கும், உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு உங்களையும் நீங்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவும் இந்த நிதியில் கிடைக்கும் அதிக அளவு பணத்தில் கொஞ்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பணி ஓய்வுக் காலம் இனியதாய் இருக்க விரும்பினால், எவ்வளவு சேமித்தாலும் தவறில்லை!

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?