பெண்களின் நிதிரீதியான சுதந்திரம் பற்றி, குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில் அதிகம் பலர் எழுதிவிட்டனர். ஆனால், பெண்களின் நிதிரீதியான சுதந்திரம் என்றால் என்ன? இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், வெவ்வேறு பெண்களுக்கு இது வெவ்வேறு விதமாக இருக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு, பணம் சார்ந்த விஷயங்களில் சுயமாக முடிவெடுப்பதே சுதந்திரம் என்று தோன்றலாம், அல்லது நிதிரீதியாக தன்னிறைவோடு இருப்பதே சுதந்திரம் என்று தோன்றலாம். இல்லத்தரசியாக இருக்கும் பெண்ணுக்கு, விரும்பும்போது பணம் செலவழிக்க முடிய வேண்டும், அல்லது அவசர சூழ்நிலைகளில் யாரையும் எதிர்பார்க்காமல் தானே சமாளிக்கும் நிலையில் இருக்க வேண்டும், அதுதான் சுதந்திரம் என்று தோன்றலாம்.
அடிப்படையில், நிதிரீதியான சுதந்திரம் என்பது அவர்களின் சமூக-பொருளாதாரப் பின்புலத்தைப் பொருட்படுத்தாமல், பெண்களுக்கு அதிகப் பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது, மரியாதை கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் இந்த உணர்வு, அவரது குடும்பம், சமூகம், நாடு என்று அடுத்தடுத்த நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்கள் நிதிரீதியாக அதிக சுதந்திரம் கொண்டிருக்கிறார்கள் என்றால், அது ஆரோக்கியமான, பாதுகாப்பான, பாரபட்சம் குறைவாக உள்ள, முன்னேற்றப் பாதையில் செல்கின்ற ஒரு சமூகத்தின் அடையாளம் எனலாம். நிதிரீதியாக சுதந்திரம் கொண்ட பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர், காலங்காலமாக நிலவிவரும் பாலினப் பாரபட்சத்தை அகற்றுவதிலும் பங்களிக்கின்றனர். பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருப்பது, முன்கூட்டியே பணி ஒய்வு பெறவும் உதவுகிறது. இதனால் இதுவரை அவர்கள் எதிர்கொண்டு வந்த எல்லாப் போராட்டங்களையும் முடித்துவிட்ட பிறகு வாழ்க்கையை அழகாக ரசித்து மகிழ்ந்து அவர்கள் வாழ முடிகிறது.
பெண்கள் நிதிரீதியாக சுதந்திரமாக இருப்பது அந்த அளவுக்கு முக்கியம் எனில், குடும்பங்களும் சமூகங்களும் அரசாங்கமும் இதில் தலையிடும் முன்பு, முதலில் அவர்கள் இதற்காக என்ன செய்ய வேண்டும்? சம்பாத்தியம், கல்விப் பின்புலம் போன்றவை எதுவாக இருந்தாலும், பெண்கள் சரியாகத் தொடர்ந்து முதலீடு செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவரின் நிதிரீதியான பலம், கல்விப் பின்புலம் போன்றவை எப்படி இருந்தாலும், அவர் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்து, சரியான விதத்தில் தொடர்ந்து முதலீடு செய்யாவிட்டால், வேலையிழப்பு, மருத்துவச் செலவுகள், துரதிருஷ்டவசமாக குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் மறைந்துபோவது போன்ற அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க முடியாது.
இன்று, பெண்கள் பல்வேறு பணிகளில் இருக்கின்றனர். ஆனால் வேலைக்குச் செல்லும் எல்லாப் பெண்களும் நிதிரீதியாக சுதந்திரமாக இருப்பதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர், முதலீடு என்று வரும்போது ஆண்களையே சார்ந்து இருக்கும் நிலைதான் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் சேமித்தாலும் போதுமான அளவு சேமிக்க முடியாமல் போகலாம், புத்திசாலித்தனமான விதத்தில் சேமிக்காமல் போகலாம். அதாவது பணவீக்கத்தை அவர்கள் அரிதாகவே வெல்ல முடியும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் நீண்ட காலம் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் வசதியை வழங்குகின்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் இந்த விஷயத்தில் பெண்களுக்கு உதவிகரமாக உள்ளது. ஒரு பெண் குறைவாக சம்பாதித்தாலும் சம்பாதிக்காவிட்டாலும் கூட, தனது சேமிப்பிலிருந்து மாதந்தோறும் SIP ஸ்கீமில் ரூ.500 கூட தொடர்ந்து முதலீடு செய்யலாம். இது நிதிரீதியாக அவர்கள் சுதந்திர நிலையை அடைய உதவும். ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது எளிது, சாதிக்கக்கூடியது தான் என்ற உணர்வை அடையும் நிலையை உருவாக்குவது மிக முக்கியமாகிறது.